Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

بسم الله الرحمن الرحيم

கட்டுப்பட்டு வாழ நம்மைப் பயிற்றுவிக்கும் ரமழான்

அகத்தையும், புறத்தையும் பரிசுத்தப்படுத்தி பழுக்கக் காய்ச்சித் தட்டியெடுத்து உருவமைக்கப்பட்ட மாசற்ற பொன்னாய் முஸ்லிமை மாற்றியமைக்க வந்த புனித ரமழான் புறப்பட்டு விட்டது. கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலன்களை அடக்கி, இரவு பகல் பாராது பல்வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு, பாவமன்னிப்புக் கோரி, தான தர்மங்கள் செய்து, முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்த வாழ்க்கையை ஒரு முஸ்லிம் ஒரு மாத கால ரமழானில் வாழ்வான். அல்லாஹ்வுக்கு அடிபணிந்து, கட்டுப்பட்டு நடப்பவன் முஸ்லிம். ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். மேலும் அல்லாஹ் யார் யாருக்கு கீழ்ப்படிந்து நடக்குமாறு பணித்திருக்கின்றானோ அவர்களுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அப்பொழுது தான் அவனது இஸ்லாம் முழுமை பெறுகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:விசுவாசிகளே!நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். மேலும் தூதருக்கும், உங்களில் காரியம் உடையவருக்கும் கீழ்படியுங்கள்.  (அந்நிஸா:59)

அல்லாஹ் ஏவியவற்றை எடுத்து நடத்தல், அவன் தடுத்தவற்றை அனுகாதிருத்தல், அவனின் கட்டளைகளை மதித்தல், அவன் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிதல், அவனின் வழிகாட்டலை மனப்பூர்வமாக ஏற்றுப் பின்பற்றல், மொத்தத்தில் அல்லாஹ் சொன்ன படி வாழல். இவ்வாறு தான் ஓர் உண்மை முஸ்லிம் வாழ்வான், வாழக் கடமைப்பட்டவன்.

அல்லாஹு தஆலாவின் போதனைகளை, வழிகாட்டல்களை மனிதகுலத்துக்கு அப்படியே அப்பழுக்கற்ற முறையில் எத்தி வைத்ததோடு, அவற்றுக்கு சொல்லும் செயலும் அங்கீகாரமும் தந்து பொது விரிவுரையாகத் திகழ்ந்தார்கள் உத்தம தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள். அண்ணலாரின் ஒட்டு மொத்த வாழ்க்கை உலக மக்கள் அனைவரும் அழகிய முன்மாதிரியாக நம்பி, ஏற்று பின்பற்றியொழுக வேண்டிய சம்பூரண வாழ்க்கைத் திட்டமாகும். இவ்வழிமுறையை பின்பற்றுவது அவனின் ஈமானின், இஸ்லாத்தின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகும்.

ஒரு முஸ்லிமானவன் தனி மனித வாழ்விலோ, கூட்டு வழ்விலோ இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களை அணுக அத்தனையும் அப்படியே பின்பற்ற வேண்டியது கட்டாயம். அவர்களுக்குக் கீழ்ப்படிந்து தன் வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டியதின் கட்டாயம் அல்லாஹ்வால் வலியுறுத்தப்பட்டுள்ளது. அல் குர்ஆனின் ஓரிடத்தில் அல்லாஹ் இப்படிச் சொல்கிறான்.

தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.  (அல் ஹஷ்ர்:7)

அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவேன், அவனுடைய தூதரின் நடைமுறைக்கு சிலதுக்கு கட்டுப்படுவேன் சிலதுக்கு கட்டுப்பட மாட்டேன் என எந்த ஒரு முஸ்லிமும் கூறவோ, வாதம்புரியவோ முடியாது, கூடாது. அவ்வாறு கூறினால் அல்லது வாதிட்டால் அவன் தெளிவாகவே இஸ்லாத்தின் எல்லைக் கோட்டைத் தாண்டி விட்டான். ஒரு விவகாரம் குறித்து அல்லாஹ்வும், தூதரும் இதுதான், இப்படித்தான் என ஒரு முடிவை, தீர்ப்பை தந்த பின் அவ்விடயம் தொடர்பில் வேறொரு தெரிவு ஒரு விசுவாசிக்கு இருக்க முடியாது. வேறொரு தெரிவை அவன் நாடவோ தேடவோ கூடாது.

ரமழான் மாதத்தில் எம் வணக்க வழிபாடுகள், சமூக பரஸ்பர தொடர்புகள் எவ்வாறு அமையவேண்டும் என்று இன்றே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். வாழ்வியல் வழிகாட்டி அல்குர்ஆன், சத்தியத்தையும் அசத்தியத்தையும் தெளிவுபடுத்தி நேர் வழிகாட்ட வந்த மாதமல்லவா? ரமழான். இதைப்பற்றி வல்லவன் அல்லாஹ் இவ்வாறு பிரஸ்தாபிக்கின்றான்.

‘இந்தக் குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.’  (அல்குர்ஆன் 02:185)

அன்புக்குரிய சகோதரர்களே! குறிப்பாக பெண் சகோதரிகளே! தாய்மார்களே!

நோன்பு என்பது பெருமை, பொறாமை, கசடு, வஞ்சகம், வழிகேடு, வாக்குமீறல் போன்ற கறைகளைக் களைந்து நாம் இறையச்சம் உள்ளவர்களாக மாறுவதற்குத்தான் கடமையாக்கப் பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.  சிந்தியுங்கள். சிந்தித்தால் தெளிவுபெறுவீர்கள். நினையுங்கள் இறைநாமத்தை. நிம்மதி பெரும் உங்கள் உள்ளங்கள். அல்லாஹ் கற்றுத்தருகின்றான்.

 ‘யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1903)

ஓர் இறை விசுவாசி நோன்பு காலத்தில்; தன்னை எவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு மாண்புமிகு நபியே முன்னுதாரணம்.

 

மாண்புமிகு நபியைப்பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) ரமழான் மாதத்தில் நபி (ஸல்)அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி (ஸல்)அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) ரமழானின் ஒவ்வோர் இரவும் ரமழான் முடியும்வரை நபி (ஸல்)அவர்களைச் சந்திப்பார். நபி (ஸல்)அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மைச் சந்திக்கும்போது காற்றைவிட அதிகமாக நபி (ஸல்)வாரி வழங்குவார்கள்.  (நூல்: ஸஹீஹுல் புஹாரி-1902)

‘(ரமழானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், தானும் இரவை உயிர்ப்பித்து, தனது குடும்பத்தை விழிப்பூட்டி, தனது வேஷ்டியையும் (அல்லாஹ்வை வணங்குவதற்காக) இறுக்கமாக கட்டிக்கொள்வார்கள்.(ஸஹீஹுல் புஹாரி-2024)

பாவக்கறைகள் அகற்றப்பட்ட நபியே தன்னை இறைவன்பால் இணைத்துக் கொள்ள ரமழானைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்றால் நாம் எங்ஙனம்? எமது வணக்க வழிபாடுகள் எப்படி அமைய வேண்டும்? ரமழான் மாதத்தில் நாம் நன்மை என்று செய்யக் கூடிய அமல்கள் அனைத்தும் குறிப்பாக தஸ்பீஹ் தொழுகை, லைலத்துல் கத்ரு 27ம் இரவு மட்டும் தான் என்பதை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் உள்ளதா என்பதை சகோதர சகோதரிகளே சற்று சிந்தியுங்கள்.

தஸ்பீஹ் தொழுகை

மார்க்க விஷயங்களில் நபி (ஸல்)அவர்களின் வழிகாட்டுதல் இன்றி எதனையும் சேர்க்கவோ, நீக்கவோ எவருக்கும் எவ்வித உரிமையும் இல்லை. நபி (ஸல்)அவர்களின் அறிவுரையிலிருந்து அவ்வாறு செய்வது நரகில் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பாவச் செயலாகும்.

தொழுகை தானே என்று அவரவருக்கு விரும்பிய விதத்தில் தொழுவதற்கும் மார்க்கத்தில் எவ்வித அனுமதியும் இல்லை. "என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுது கொள்ளுங்கள் " என்ற நபி (ஸல்)அவர்களின் அறிவுரை, தொழுகையை நபி(ஸல்)அவர்கள் தொழுத முறைப்படிதான் தொழ வேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறுகிறது. எனவே தான் தொழுகை தானே என்று எவரும் சுப்ஹு தொழுகை போன்ற கடமையான தொழுகைகளை அதன் எண்ணிக்கையை விட்டுக் கூட்டியோ குறைத்தோ தொழுவதில்லை. அதுபோல் அத்தொழுகைகளில் நபி (ஸல்)அவர்கள் செய்து காண்பித்துத் தந்திராத எவ்வித செயல்களையும் செய்வதற்கும் தயாராவதில்லை. வித்தியாசமான முறையில் ஒரு தொழுகை இருக்குமாயின் அதனை நபி (ஸல்)அவர்களே தொழுது காண்பித்து தந்திருப்பார்கள். இதற்கு உதாரணமாக "பெருநாள் தொழுகை", "ஜனாஸா தொழுகை" மற்றும் "மழைத் தொழுகை" போன்றவை உள்ளன.

இவையல்லாமல் தொழுகையில் மிகப்பெரிய மாறுதல்களை உள்ளடக்கிய தஸ்பீஹ் தொழுகை என்ற ஒன்று இருந்திருக்குமாயின் நிச்சயமாக நபி (ஸல்)அவர்கள் அதனை கற்றுத் தந்திருப்பார்கள். தஸ்பீஹ் தொழுகை என்பது ஏனைய தொழுகை போல் இல்லாமல் பல முறைகளில் மாற்றமாக அமைந்துள்ளது . அவ்வாறு இருக்கும் போது அதை நடைமுறைப்படுத்த சரியான, ஆதாரப்பூர்மான வலுவான ஹதீஸ்கள் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக கருதப்படும் செய்திகளில் பிரபல நபித்தோழர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் குறித்து காண்போம்.

நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள், அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களைப் பார்த்து, அப்பாஸே! என் பெரிய தந்தையே! நான் உங்களுக்கு வழங்கட்டுமா? அன்பளிப்பு கொடுக்கட்டுமா? உங்களுக்கு கைமாறு இல்லாமல் கொடுக்கட்டுமா? உங்களுக்குப் பத்து விஷயங்களை கற்றுக் கொடுக்கட்டுமா? அதைச் செய்தால், நீங்கள் முன்னால் செய்த பாவங்களையும், பின்னால் செய்த பாவங்களையும், புதிய பாவங்களையும், பழைய பாவங்களையும், வேண்டுமென்றே செய்த பாவங்களையும், தவறுதலாகச் செய்த பாவங்களையும், சிறிய பாவங்களையும், பெரிய பாவங்களையும், இரகசியமாகச் செய்த பாவங்களையும், பகிரங்கமாகச் செய்த பாவங்களையும் இந்தப் பத்து வகையான பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஃபாத்திஹா அத்தியாயமும் இன்னொரு அத்தியாயமும் ஓத வேண்டும். முதல் ரக்அத்தில் ஓதுதல் முடிந்ததும் நிலையில் இருக்கும் போது ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹா இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று 15தடவை கூறுங்கள். பிறகு ருகூவு செய்யுங்கள். ருகூவு செய்த நிலையில் மேற்சொன்ன தஸ்பீஹை10தடவை சொல்லுங்கள். பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி 10தடவை அந்த தஸ்பீஹை கூறுங்கள். பின்னர் ஸஜ்தாவிற்குச் செல்லுங்கள். அங்கு ஸஜ்தாச் செய்த நிலையில்10தடவை அந்த தஸ்பீஹை செய்யுங்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தி அந்த தஸ்பீஹை10தடவை கூறுங்கள். பின்னர் ஸஜ்தாச் செய்து அந்த தஸ்பீஹை10தடவை கூறுங்கள். பின்னர் தலையை உயர்த்தி அந்த தஸ்பீஹை10தடவை கூறுங்கள். இதுஒவ்வொரு ரக்அத்திலும் (மொத்தம்)75ஆகும். இதை நான்கு ரக்அத்திலும் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு தடவை செய்ய முடிந்தால் அவ்வாறே செய்யுங்கள். அவ்வாறு முடியவில்லையானால் வாரத்திற்கு ஒரு முறை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் மாதத்தில் ஒரு தடவை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் வருடத்தில் ஒரு முறை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் வாழ்நாளில் ஒரு முறை செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் அபூதாவூத் (1105))

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வரும் மூஸா பின் அப்துல் அஸீஸ் ஆதாரமாகக் கொள்ளத்தக்கவர் அல்லர். இவர் சில நேரத்தில் தவறாக அறிவிப்பவர் என்று ஹாகிம் கூறுகிறார். இவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர் என்று அபுல் ஃபழ்ல் அவர்கள் கூறுகிறார்கள். இப்னுல் மதனீ அவர்கள் இவர் பலவீனமானவர் என்று குறிப்பிடுகிறார்கள். இமாம் தஹபீ கூறுகிறார்கள், இவருடைய ஹதீஸ்கள் மறுக்கப்படுபவைகளில் உள்ளதாகும். குறிப்பாக அல்ஹகம் பின் அபான் என்பவர் மூலம் அறிவிப்பவை. (இச்செய்தியை அவர் அல்ஹகம் பின் அபான் மூலமே அறிவித்துள்ளார்.) மேலும் அவரும் (அல்ஹகம் பின் அபான் என்பவரும்) உறுதியானவர் இல்லை.

(நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம் 6, பக்கம் 550)

மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் நல்லவர் எனினும் மனன சக்தியில் கோளாறு உள்ளவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்கள்.  (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் பாகம்1, பக்கம்552)

மேலும் இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் ஆட்சேபனை தெரிவிக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் பலவீனமானவர் என்று மேலும் பல ஹதீஸ் கலை அறிஞர்களும் குறிப்பிட்டுள்ளனர் .

இவ்வாறாக தஸ்பீஹ் தொழுகை பற்றி வரும் அனைத்து அறிவிப்புகளும் ஆதாரப்பூர்வமற்ற அறிவிப்புகளாகவே உள்ளன இத்தஸ்பீஹ் தொழுகை இந்தியாவில் சில பகுதிகளில் மட்டும் குறிப்பாக தமிழகத்தில் ஆங்காங்கு காணப்படுகின்றது. ஒரு வணக்கம் என்றால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாகவே அமைந்திருக்கும் ஆனால் நம் ஊரிலோ நபி (ஸல்) காட்டித்தராத இத்தஸ்பீஹ் தொழுகை பெண்களுக்கு மட்டும் நடத்தும் காரணம் என்ன?ஆதாரமற்ற செயலை நன்மை என்று நாம் செய்தால் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானா?இதை பின்வரும் ஹதீஸ் மூலம்  விளங்கலாம்.

வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை. நடைமுறையில் சிறந்தது நபி (ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி அவர்கள்  கூறினார்கள். (இப்னு மஸ்வூத் ரலி,ஜாபிர் ரலி, புகாரீ,நஸயீ, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை 23 ரகாஅத்களா 11 ரகாஅத்களா ?

"ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!" என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். " ரமளானின் இரவுத் தொழுகையை அவரவர் தனியாகத் தொழுது கொள்ளும் இந்நிலையில் மக்கள் இருக்கும்பொழுது நபி(ஸல்)அவர்கள் மரணித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது!" என்று இமாம் இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.  (நூல் : புகாரி:2007)

அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்: "நபி(ஸல்)அவர்களின் தொழுகை ரமளானில் எவ்வாறு இருந்தது?' என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், 'ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினொன்று ரக்அத்களை விட அதிகமாக நபி(ஸல்)அவர்கள் தொழமாட்டார்கள்; நான்கு ரக்அத்கள் தொழுதார்கள்; அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று கூறினார். மேலும் ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் அவர்களே! வித்ரு தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குகிறீர்களே? (உளூ நீங்கி விடுமே) என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்)அவர்கள், 'ஆயிஷாவே! என் கண்கள் தாம் உறங்குகின்றன என் உள்ளம் உறங்குவதில்லை" எனக் கூறினார்கள். (நூல் :புகாரி:2008)

இந்த லைலத்துல் கத்ர் நாள் எப்போது? அதில் நம்முடைய வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதை அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் காட்டிய வழிமுறை.

லைலத்துல் கத்ர் நாள் ரமலான் மாதத்தின் 27 ஆம் நாளில்தான் என இஸ்லாத்தில் பெரும்பான்மையான மக்கள் விளங்கி வைத்துள்ளனர். அவர்கள் அவ்வாறு விளங்கிக் கொண்டதற்கு காரணத்தையும் ஹஜ்ரத்மார்கள் கூறுகிறார்கள். லைலத்துல் கத்ர் நாள் பற்றி அல்லாஹ் இறக்கிய ஸுரத்துல் கத்ர் அத்தியாயத்தில் லைலத்துல் கத்ர் என்ற வார்த்தை (9 எழுத்துக்கள்) மூன்று முறை வருகிறது. மேற்படி மூன்றை ஒன்பதைக் கொண்டு பெருக்கினால் இருப்பத்தி ஏழு. எனவே இருபத்தி ஏழாம் இரவில் தான் லைத்துல் கத்ர் என்று குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத ஒரு ‘அரிய?...!’விளக்கத்தைத் தருகின்றனர். மேற்படி விளக்கத்தை தருவதோடு மட்டுமில்லாமல் இஸ்லாமிய மார்க்கத்தை ஒரு சடங்கு மார்க்கமாக கருதி பலர், ரமழான் மாதத்தின் ஒரு சில குறிபிட்ட நாட்களில் (அதாவது வெள்ளி, திங்கள் மற்றும் 27 ஆம் நாள் இரவு ஆகிய நாட்களில்) பள்ளிகளில் நிரம்பி வழிவர். குறிப்பாக இருபத்தி ஏழாம் இரவில் மாத்திரம் அதுவரை கண்டிராத கூட்டம் பள்ளியில் அலைமோதும். அன்றைய இரவில் பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டும், பண்டங்கள், பழங்கள் குவியும். இதுதான் நபி (ஸல்) அவர்கள் காட்டிதந்த வழிமுறையா?

பள்ளியில் தங்கி இருத்தல் (இஃதிகாஃப்)

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தின் கடைசி பத்து நாட்களிலும் பள்ளியில் தங்கி இருந்து, லைலத்துல் கத்ர் நாளை அடைவதற்காக இஃதிகாஃப் இருப்பதோடு, அந்த நாட்களில் மற்ற நாட்களைவிட அதிகமான அளவு வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

ரமளானின் கடைசிப் பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி (ஸல்)லல்லாஹு அலைஹி வ(ஸல்)லம் அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; அந்த நாட்களை  உயிர்ப்பிப்பார்கள்; தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்! என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள்.  (நூல் புகாரி: 2024.)

 

லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்)லல்லாஹு அலைஹி வ(ஸல்)லம் அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி (ஸல்)லல்லாஹு அலைஹி வ(ஸல்)லம் அவர்கள், 'லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே, அதை இருபத்தொன்பதாம் நாளிலும், இருபத்தேழாம் நாளிலும், இருபத்தைந்தாம் நாளிலும் தேடுங்கள்!" என்று இறைத்தூதர் (ஸல்)லல்லாஹு அலைஹி வ(ஸல்)லம் அவர்கள் கூறியதாக உபாதா இப்னு ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.   (நூல்:புகாரி: 2023.)

“ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" என்று இறைத்தூதர் (ஸல்)லல்லாஹு அலைஹி வ(ஸல்)லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்.  (நூல் : புகாரி:2017)

ஒவ்வொரு காலங்களிலும் மக்கள்களிடையே மார்க்க விஷயங்களில் பல சந்தேகங்கள் தோன்றும், நோன்பு காலங்களில், நோன்பு பற்றி உண்ணுவது, அருந்துவது, உறங்குவது, இரவு தொழுகை, மருத்துவம், போன்றவற்றின் சந்தேகம் எழும். அதை நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான சொல் செயல் அங்கீகாரம் கொன்டு குர்ஆனுக்கும் முரண் படாமல் விளக்கம் கொடுப்பது நம் அனைவரும் மீது கடமை. இது போன்ற விஷயங்களில் நன்மை மட்டும் ஏவினால் போதும் தீமையைத் தடுக்கக் கூடாது சமுதாய ஒற்றுமைதான் முக்கியம் அல்லாஹ்வின் மார்க்கம் எப்படியும் கேவலப்படட்டும் நபி (ஸல்) அவர்களின் நடைமுறை எப்படியும் மாசுபடட்டும் என்று தங்களின் சிற்று அறிவை கொண்டு மார்க்கத்தில் புதிய பாதையில் போராட போவதாக எண்ணி தீமையைக் கண்டும் காணாமல் இருந்தால் பனுஇஸ்ராயில் காலத்தில் சனிக்கிழமை வரம்புமீறிய மீனவர்களை தடுக்காமல் நன்மை மட்டும் செய்த மக்களுக்கு இறங்கி தண்டனை நமக்கும் ஏற்படாதா?

“எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.”4:115

ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையில் உண்மையான நபி (ஸல்) அவர்களின் நடைமுறையை விட நபி (ஸல்) அவர்கள் சொல்லாத செய்யாத அங்கீகாரமில்லாத பித்அத்தான (வழிகேடுகள்)காரியங்கள்தான் மக்களிடையே அதிக நடை முறையில் உள்ளது. எனவே நபி (ஸல்) அவர்களின் நடைமுறையை செயல்படுத்த பிரச்சாரம் செய்ய சத்தியத்தை அறிந்த நமக்குதான் அதிக பொறுப்பு. நபி (ஸல்) அவர்களின் நடைமுறையை மக்களிடம் செயல் படுத்தி அதன் மூலம் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தி அவர்களுடைய மறுமை வாழ்கையை சொர்க்கத்திற்கு உரியதாக மாற்ற நாம் போராடாமல் இவ்வுலக அற்ப லாபங்களுக்காக நாம் போராடுவதால் நமக்கு என்ன பயன்?அவர்களுக்கு என்ன பயன்?.

இதை போன்ற கப்சாக்களும், கட்டுகதைகளும், நம்மை பற்றியோ, நம் குடும்பத்தைப்பற்றியோ சொல்லப்பட்டால் நாம் எவ்வாறு துடிப்போம்?அல்லாஹ்வுடைய மார்க்கம், ரசூல் (ஸல்) அவர்களுடைய நடைமுறை இப்படி கேவலப் படுத்தப்படுவதை நாம் கண்டும் காணாமல் இருந்தால். நாம் யார்?எதற்காக வாழ்கிறோம்?மறுமையில் இறைவனிடம் எவ்வாறு பதில் சொல்வோம்.

“யாரேனும் ஒரு தீமையைக் கண்டால் அதைக் கையால் தடுக்கட்டும், அதற்கு சக்தி பெறாதவர் தமது நாவால் தடுக்கட்டும், அதற்கும் இயலாதவர் தமது உள்ளத்தால் அதை வெறுக்கட்டும். இதுவே ஈமானின் கடைசி நிலையாகும்”                              (முஸ்லிம், திர்மிதீ)

பரவசத்தோடு பலராலும் எதிர்பார்க்கப்படும் இந்த ரமழானில் அல்குர்ஆனை படித்து, உணர்ந்து நீங்கள் நபி (ஸல்) வழியில் நடக்க சிந்திக்கக் கூடாதா? அது வாழ்வின் வசந்தத்தை தேடித்தரும் வழியல்லவா? அந்த வசந்தத்தை, அந்த இன்பகரமான வாழ்கையை அனுபவிக்க தயாராகாமல் இன்னுமா உங்கள் உள்ளங்களுக்கு பூட்டுப்போட்டுள்ளீர்கள்? இதனால்தான் அல்லாஹ் இவ்வாறு வினா எழுப்புகின்றான்.

‘அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?’  (அல்குர்ஆன் 47:24)

எனவே, அருள் மறைக்குரிய மாதத்தில் அதன் வழி நடக்கத் தயாராகுங்கள். தூதர் வழி நடக்க முன்வாருங்கள். புகழனைத்தும் இறைவனுக்கே.

அன்று நபி (ஸல்)அவர்கள் இல்லாமலாக்கிய இணைவைத்தலின் கேத்திரங்கள் இன்று நம்மிடையே இஸ்லாமிய பெரியார்களின் பெயர்களை தாங்கி இணைவைத்து வணங்குவதற்கான தர்ஹாக்களாக திகழ்கின்றன. ஜாஹிலியா (அறியாமை) கால கூட்டங்கள் இன்றும் தங்கள் நேர்ச்சைகளை, குர்பானிகளை அவ்வாலயங்களில் நிறைவேற்றி மகிழ்ச்சியோடு திரும்புகின்றனர்.

நபி(ஸல்)அவர்கள் இணைவைக்கும் வியாபாரத்தலங்களை மக்கள் நடமாட்டமில்லாத வனாந்திரங்களாகவும், ஷிர்க்கின் (இணைவைத்தல்) பீடங்களாக இருந்த ஊர்களை, நகரங்களை ஜன சஞ்சாரமற்ற பாலைவனங்களாக மாற்றியிருந்தார்கள். இன்று நமது நாட்டில், ஷிர்க்கின் தலைமை பீடங்களாக இணைவைக்கும் வியாபாரத் தலங்களாக அஜ்மீர், நாகூர், ஏர்வாடி, முத்துப் பேட்டை போன்றவைகள் திருவிழா கோலத்துடன் ஊருக்கு ஊர் காட்சியளிக்கின்றன.

கப்ர் வணக்கம், பூ போடுதல், உரூஸ், இசை நிகழ்ச்சி, ஸஜ்தா செய்தல், கபுர் கட்டிடம் கட்டுதல், தரைக்கு மேல் உயர்த்துதல், பிரார்த்தனை செய்தல், நேர்ச்சை நிறைவேற்றுதல் போன்ற அனைத்து செயல்களும் நேர்வழிகளாக மாற்றப்பட்டன. கப்ருக்கு செல்வது, விளக்கேற்றுவது, அல்லாஹ்வின் சாபத்திற்குறிய செயல்கள் என்று நபி (ஸல்)அவர்கள் அன்று கூறினார்கள். இன்று அடக்கஸ்தலங்கள் பரக்கத் தரக்கூடிய இடங்களாக மக்களிடம் காட்டப்படுகின்றது.

இதுதான் இஸ்லாம் என்று எண்ணி ஏமாந்த அப்பாவி முஸ்லிம்கள் இணைவைப்பை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றுகிறார்கள். அப்பாவி முஸ்லிம்களே! இதை விட்டு விலகி அல்லாஹ்வை தூய்மைப்படுத்துங்கள்.

ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்

97A, வடக்குமெயின்ரோடுஏர்வாடி- 627103.

போன்- 04637 241201, 9500794544.