Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் - ஹிஜ்ரி 1434 ரமளான் சுற்றறிக்கை

​பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..........

அன்பான  சகோதர சகோதரிகளே!

ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்-தின் சார்பாக, ஹிஜ்ரி 1434 ரமளான் மாதத்தில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.

நாம் ஏர்வாடியில் தூய இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த பல்லாண்டுகாலமாக அல்லாஹ்வுடைய திருப்தியை மட்டும் எதிர்பார்த்தவாகளாக உழைத்ததின் விளைவு, எண்ணிலடங்கா மக்களை இணைவைப்பிலிருந்து காப்பாற்றி நிரந்தர நரக நெருப்பை நோக்கி செல்ல இருந்தவர்களை அல்லாஹ் அவனுடைய அருளால் காப்பாற்றியுள்ளான்.  சுப்ஹனல்லாஹ்.

இன்னும் அறிந்தோ அறியாமலோ அல்லாஹ்விற்கு இணைவைத்து வாழும் மக்களை நமதூர் ஏர்வாடியில் இன்றும் காணக்கிடைக்கின்றது. அவர்களுக்கும் நாம் அல்லாஹ்வை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதைப்பற்றி எடுத்துரைத்து இஸ்லாமிய மார்க்கத்தை புரிய வைக்க இன்னும் அதிகமதிகம் பாடுபட வேண்டியுள்ளது.

 அல்லாஹ்வுடைய மார்க்கம் மேலோங்கும் வகையில் நாம் உழைத்து கொண்டிருந்தால், அதற்கான நற்கூலியை நாம் இம்மையிலும், மறுமையில் பெற்று நிம்மதியாக சுவனவாழ்வை அடைய அல்லாஹ் அருள் செய்வான்.   அல்லாஹ்விற்கு மட்டுமே பயந்தவர்களாக வாழ்ந்து, அவனுக்காக மட்டுமே வணக்க வழிபாடுகளை அமைத்து நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் என்றென்றும் செயல்பட்டுக்கொண்டிருப்போம்.  அவ்வாறு வாழ அல்லாஹ் நமக்கு என்றென்றும் அருள் செய்ய பிரார்த்திப்போம்.

மேலும், அல்லாஹ் நமக்கு இறக்கி அருள் செய்த குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான நபிவழியையும் தெளிவாக சிந்தித்து விளங்கி வாழ்வதற்காக  நாம்

Ø  தெருமுனைப்பிரச்சாரங்கள்,

Ø  அஸ்மா பெண்கள் அரபிக்கல்லூரி,

Ø  குழந்தைகளுக்கான அரபி மொழி பாட சாலை,

Ø  வீடுகளில் பெண்களுக்கான மார்க்க விளக்க வகுப்புகள்,

Ø  பெண்களுக்கான வினா விடை பிரசுரங்கள்,

Ø  குடும்பத்தில் ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்க குர்ஆன் ஹதீஸ் உபதேசங்கள்,

Ø  மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக பள்ளிக் கூடங்களுக்கு சென்று நடத்தும் ஒலி ஒளி திரை வழி கல்வி வகுப்புகள்,

Ø  அனைத்து வயதினருக்கும், குர்ஆனை படித்து விளங்கி கொள்ள ததப்புருல் குர்ஆன் வகுப்புகள்,

Ø  புதிதாக இஸ்லாத்தை ஏற்று வருபவர்களுக்கு சிறந்த ஆலோசனை வகுப்புகள்,

Ø  இஸ்லாத்தை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்வதற்காக மாதாந்திர  துண்டு பிரசுர விநியோகம்,

Ø  நமது ஜமாஅத் வளாகத்தில் வந்து படித்து செல்வதற்காக பல மொழி நூல் நிலையம்,

போன்றவைகள் நமது ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்தின் நிர்வாகத்தின் மூலமாக செய்து வருகின்றோம் என்பதை ஏர்வாடி மக்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். 

மேலும்  ரமளான் மாதத்தில் ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் இப்தார் விருந்தாக நோன்பு கஞ்சி ஏற்பாடு செய்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.  ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜிதில் நடைபெறும் இப்தார் விருந்தில் ஆண்களும் பெண்களும் இப்தார் விருந்தில் கலந்து கொள்கின்றார்கள்.  இப்தார் விருந்து கீழ்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் நன்மையை கருதி செய்துவருகின்றோம்.  எனவே விருந்து செலவுகளில் பங்கெடுக்க விரும்பும் ஜமாஅத்தார்கள் தங்களுடைய நன்கொடையை ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்திற்கு வழங்கி நன்மையின் பங்கு பெற்றுக்கொள்ளலாம்.

நோன்பாளிகளுக்கு இஃப்தார் உணவளித்தால் நோன்பாளிகளுக்கு கிடைக்கும் நன்மையைப் போல உணவளிப்பவருக்கும் கிடைக்கும்என நபி (ஸல்) கூறியுள்ளார்கள் (அஹ்மத்)

மிகச் சிறந்த இரண்டு செயல்கள். ''இஸ்லாத்தில் சிறந்த செயல் எது?'' என ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியதற்கு, ''நீர் உணவளிப்பதும், நீ அறிந்தோருக்கும், அறியாதோருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு நூல்: புகாரீ, முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஒரு நோன்பாளியை  நோன்பு திறக்கச் செய்கிறாரோ அவருக்கு நோன்பாளியின் நன்மையைப் போன்று கிடைக்கிறது. ஆனாலும் நோன்பாளியின் நன்மையில் எதுவும் குறைந்து விடாது. அறிவிப்பவர் : ஸைத் பின் ஹாரித் (ரலி) நூல் : திர்மிதி (735).

இன்றைய பொருளாதார சுழ்நிலையின் காரணமாக, நோன்பு கஞ்சி மற்றும் இஃப்தார் செலவுகளுக்காக தினமும்  சுமார் பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகின்றது.   நாம் நமது மஸ்ஜிதில் தயார் செய்து தினமும் விநியோகித்து வரும் ஒரு நாள் கஞ்சி செலவு வகைக்காக மட்டும் ரூபாய் 5000/=  நிர்ணயித்துள்ளோம்.   எனவே  இந்த நன்மையிலும் பங்கெடுக்க விரும்பும் ஜமாஅத்தார்கள் தங்களுடைய அன்பளிப்புகளை ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் நிர்வாக பொறுப்பாளர்களிடம் கொடுக்கும்படி  அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பெருநாள் தர்மம். (ஸகாத்துல் ஃபித்ர்) 

ரமழானில் இருந்து விடுபடுமுகமாக ஸகாத்துல் ஃபித்ரைஅனைத்து மனிதர்கள் மீதும் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். ஒரு ஸாஉபேரீத்தம்பழம் அல்லது ஒரு ஸாஉகோதுமை சுதந்திரமானவன், அடிமை, ஆண், பெண் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் வழங்க வேண்டும் என விதித்தார்கள்அறிவிப்பவர் : அலி இப்னு உமர் (ரழி),நூற்கள் :புகாரி, முஸ்லிம், முஅத்தா.

மேலும் ரமளான் மாதத்தில் ஏற்படும் தவறுகளுக்காக ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்த வேண்டிய ஸகாத்துல் ஃபித்ர் என்னும் பெருநாள் தர்மத்திற்கான தொகையை ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்தில் இயங்கும் பைத்துல்மால் நிர்வாகம் வசூல் செய்து பல வருடங்களாக முறையாக விநியோகம் செய்துவருகின்றது.

ஏர்வாடி முஸ்லீம் ஜமாஅத் ஏர்வாடியில் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, இன்றுவரை ஸகாத்துல் ஃபித்ரை வசதியுள்ளவர்களிடம் வசூல் செய்து ஏழைகளின் வீடு தேடி சென்று கொடுத்து வருகிறது. மக்களை தெருதெருவாக அலைய விட்டுக்கொண்டிருந்த சூழ்நிலையை மாற்றி, முன்மாதிரியாக இஸ்லாம் சொன்ன அடிப்படையில் ஏர்வாடி ஊரில் உள்ள ஏழைகளுக்கு ஃபித்ராவை வழங்கிவரும் அதே வேளையில், ஏர்வாடியை சுற்றியுள்ள கிராமங்களில் வசித்து வரும் முஸ்லீம்களுக்கும் பெருநாள் தினத்தில் சந்தோஷமாக பசி இல்லாமல் வாழ ஃபித்ரா வழங்கி வருகிறோம்.

ஏர்வாடி, பணகுடி, வள்ளியூர், திருக்குறுங்குடி, களக்காடு, மாவடி போன்ற ஊர்களுக்கு ஃபித்ரா விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது. பிரிவினைகள் இல்லாமல் ஒரே ஜமாஅத்தாக வாழ்ந்து வந்த காலத்தில் ஏர்வாடி ஃ பித்ரா மதுரை வரை விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது ஜமாஅத் அல்லாத, மஸ்ஜிதுகள் இல்லாத இயக்கங்கள், விளையாட்டு சங்கங்கள், சமூக சேவை இயக்கங்கள் தங்கள் பெயர்களை மக்கள் அறிந்து கொள்வதற்காக ஃபித்ராவை தனித்தனியாக வசூல் செய்து நாம் ஃபித்ரா வழங்கிய அதே குடும்பத்திற்கு மீண்டும் மீண்டும் வழங்குவதால், ஏற்கனவே மதுரை வரை வழங்கிவந்த ஃபித்ரா ஏர்வாடி மற்றும் சில கிராமங்களுக்கே வழங்க முடிகிறது என்பதையும் வருத்தத்துடன் இங்கே பதிவு செய்து கொள்கிறோம்.

மேலும் ரமளான் மாத ஸகாத்துல் பித்ர் என்னும் பெருநாள் தருமத்தை சேகரித்து  நபி(ஸல்) அவர்கள் அதை விநியோகித்தார்கள் என்பதால்தான் நாம் மக்களிடம் ஸகாத்துல் ஃபித்ராவையும் சேகரித்து விநியோகம் செய்கின்றோம்.  அதற்கான ஹதீஸ் ஆதாரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரமளான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள்.............., அபூஹுரைரா (ரலி) புகாரி 3275, 5010

மக்கள் முன்கூட்டியே பெருநாள் தர்மமான ஸகாத்துல் ஃபித்ரை வழங்கிவிட வேண்டும் என்பதற்கான ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509

நபித் தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் பதியப்பட்டுள்ளது.

வருடாவருடம் ஸகாத்துல் பித்ருக்கான தொகை நிர்ணயம் செய்யப்படும். இவ்வருடம் குடும்பத்திலுள்ள ஒரு நபருக்கு ரூபாய் 100.00 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே குடும்பத்தில்  பிறந்த குழந்தைக்கும் சேர்த்து கணக்கிட்டு எத்தனை நபர்கள் உள்ளார்களோ அத்தனை பேர்களுக்கும் தலைக்கு 100.00 (நூறு) ரூபாய் என கணக்கிட்டு ஸகாத்துல் பித்ர் தொகையை தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நோன்பு பெருநாள் விருந்து

ஏர்வாடி முஸ்லீம் ஜமாஅத் குடும்பங்கள் ஒன்று கூடி பெருநாள் தொழுகை தொழுது சந்தோஷமாக இருக்க வேண்டிய பெருநாள் தினத்தில் ஜமாஅத்தார்கள் அனைவருக்கும் நமது ஏர்வாடி முஸ்லீம் ஜமாஅத் சார்பாக பெருநாள் விருந்து ஏற்பாட்டை பல்லாண்டுகளாக செய்து வருகிறோம். ஜமாஅத்தை சேர்ந்த ஒரு சில சகோதரர்களின் பொருளாதாரத்தை கொண்டு இந்த பெருநாள் விருந்து நடைபெற்று வருகிறது.  இது தேவைதானா என பல பேர் எதிர்குரல் எழுப்பினார்கள். எழுப்புகிறார்கள்.

இணைவைக்கும் மக்கள் அவர்களுடைய கந்தூரி விழாக்களில் ஊர் முழுவதும் விருந்து கொடுத்து சந்தோஷத்தை கொண்டாடுகிறார்கள். அதற்கு ஏராளமான பொருளாதாரத்தையும் செலவு செய்கிறார்கள்.

அல்லாஹ் சிறப்பாக்கிய பெருநாள் தினத்தில், நோன்பை ஹராமாக்கிய புனிதமான நாளில்  நம்மில் சிலர் மட்டும் நல்ல உணவை சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல்,  ஜமாஅத்தை சேர்ந்த அனைத்து சகோதர சகோதரிகளும் விருந்துண்டு, பெருநாள் தினத்தை சந்தோஷமாக கொண்டாடுவது எந்த வகையில் தவறாகும் என இதை தவறு என விமர்சிப்பவர்கள் பதில் கூற கடமைப்பட்டுள்ளார்கள்.

மேலும் கந்தூரி விழாக்களில் வசூல் செய்வது போல் வீட்டிற்கு வீடு வரி என சொல்லி வசூலித்து இந்த விருந்து வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். ஒரு சில வசதியுள்ளவர்கள் பெருநாள் தினத்தின் சிறப்பை அறிந்து தங்கள் பொருளாதாரத்தை செலவு செய்ய முன்வருகிறார்கள். அதன் அடிப்படையில்தான் பெருநாள் விருந்து நடைபெறுகிறது. எனவே இந்த விஷயத்தில் எந்தவிதமான தவறான எண்ணங்களை யாரும் யாருக்கும் ஏற்படுத்தாதீர்கள்.

மேலும்,  அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு அருள் செய்த சந்திர படித்தரங்களின் அடிப்படையில் நாம், சரியான நாளில் பெருநாள் கொண்டாடுகின்றோம் என்பதை  நம்மை எதிர்ப்போர்  ஒவ்வொரு மாதமும் சந்திரனின் படித்தரங்களை புறக்கண்ணால் பார்க்கும் போது தெளிவாக அறிந்து கொள்கின்றார்கள்.  அவ்வாறு அறிந்த பின்னும், தவறான நாளில் ஒவ்வொரு மாதத்தையும் ஆரம்பிக்கவும் முடிக்கவும் செய்கின்றனர். அவர்களில் சிலர் நம்முடைய பெருநாள் விருந்தை தவறாக மக்கள் மத்தியில் விமர்சித்து வருகின்றனர். எனவே அவர்களை யாரும் பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மிகச் சிறந்த இரண்டு செயல்கள்.

''இஸ்லாத்தில் சிறந்த செயல் எது?'' என ஒரு மனிதர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவியதற்கு, ''நீர் உணவளிப்பதும், நீ அறிந்தோருக்கும், அறியாதோருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு நூல்: புகாரீ, முஸ்லிம்

எனவே  இணைவைப்பில்லாத ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்தில் இணைந்து தாங்களும் இஸ்லாத்தின் உன்னத பணிகளில் பங்கெடுக்கும்படி அன்புடன் ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத் சார்பாக உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஹிஜ்ரி 1434  வது வருட ரமளான் மாதம் செவ்வாய்கிழமை (09.07.2013) ஆரம்பித்தது.  ரமளான் மாதம் 29 நாட்களுடன் எதிர் வரும் செவ்வாய்கிழமையுடன் (06.08.2013) முடிவடைகின்றது. 

எனவே புதன்கிழமை (07.08.2013) ஹிஜ்ரி 1434 வது ஆண்டின் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும்.

நோன்பு தடுக்கப்பட்ட பெருநாள் தினமான புதன்கிழமை  நாம் நோன்பிருந்து ஹராமான காரியத்தை செய்துவிடாமல்  அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க  வேண்டும்.

 

ஸகாத்துல் ஃபித்ராவிற்கான தொகை ஒரு நபருக்கு  = ரூபாய் 100.00 மட்டும்

 

இப்படிக்கு

நிர்வாகம்

ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்

10 ரமளான் 1434  வியாழக்கிழமை