Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

بسم الله الرحمن الرحيم

அன்பான வேண்டுகோள்!

 وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِ جَهَنَّمَ ۖ وَسَاءَتْ مَصِيرًا

நேர்வழி இன்னதெனத் தனக்குத் தெளிவான பின்னரும், இத்தூதரை விட்டுப் பிரிந்து இறைநம்பிக்கையாளர்கள் செல்லாத வழியில் செல்கிறவனை, அவன் செல்லும் வழியிலேயே விட்டுவிட்டு, அவனை நரகத்திலும் நுழையச் செய்வோம். அது சென்றடையும் இடங்களில் மிகக் கெட்ட இடமாகும். (திருக்குர்ஆன் 4:115)

படுகளம் நடத்தும் நிர்வாகிகளே, பங்கேற்கும் அன்புச் சகோதர, சகோதரிகளே!

சற்று சிந்தித்துப் பாருங்கள்!

1.     இறைவனை மட்டும் வணங்கச் சொல்கிறது இஸ்லாம்.

2.     இறைவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்யச் சொல்கிறது இஸ்லாம்.

3.     ஆபாசத்துடன் கூடிய ஆடல் பாடல்களைத் தடை செய்துள்ளது இஸ்லாம்.

4.     இஸ்லாம் என்பது சாந்தி மற்றும் இறைவனுக்கு மட்டுமே கட்டுப்படுதல்.

5.     இறைவன் மீது ஈமான் கொள்வது, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகளே இஸ்லாமின் தூண்கள். இந்த வணக்க வழிபாடுகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நபி(ஸல்) தம் 23ஆண்டுகால வாழ்க்கையில் அழகிய முறையில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்களை நாம் நம் உயிரைவிட அதிகமாக நேசிக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறைப்படி வாழ்வதில்தான் அந்த நேசம் வெளிப்படும். அதுதான் இஸ்லாம் ஆகும். நபி(ஸல்) காட்டித் தராத ஒவ்வொரு செயலும் வழிகேடாகும்.

இறைத்தூதர்(ஸல்) உரை நிகழ்த்தியபோது, உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் - திருக்குர்ஆன் ஆகும். வழிகாட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (இஸ்லாமிய பெயரால்) புதிதாக உண்டாக்குவதே ஆகும். (இஸ்லாமின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடே ஆகும் வழிகேடு ஒவ்வொன்றும் நரகத்தில் சேர்க்கும் என நபி(ஸல்) கூறினார்கள்.                                  அறிவித்தவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி)

நூல்: ஸஹீஹ் முஸ்லிம் ஹதீ எண்: 1573

சகோதர சகோதரிகளே இப்போது சற்று சிந்தியுங்கள் !

நீங்கள் செய்து வரக்கூடிய படுகளம் நபி(ஸல்) காட்டித் தந்த வழிமுறையா? அல்லது பிற மதத்தவர்கள் செய்துவரும் வழிபாடுகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது அல்லவா?


இஸ்லாமியர்கள் எனக் கூறும் நீங்கள் முஹர்ரம் மாதத்தில் செய்வது

தங்களின் திருவிழாக்களில்பிற மதத்தவர்கள் செய்வது

Ø  மாலையிட்டு பஞ்சா எடுப்பது

Ø  சந்தனக் கூடு தூக்குவது

Ø  பூக்குழி இறங்குதல்

Ø  நன்மைக்காக மாவிளக்கு ஏந்துதல்

Ø  உப்பு மிளகு போடுதல்

Ø  செண்டா அடித்தல்.

Ø  வெடி வெடித்தல்.

Ø  முச்சந்தியில் நேருக்கு நேர் கூடுகள் சந்தித்தல்.

Ø  பொது அமைதிக்கு வேட்டு வைக்கும் ஆடல், பாடல்.

Øசந்தனம் பூசி மாலையிட்டு தலையில் கும்பம் வைப்பது.

Øசப்பரத் திருவிழா, தேர் இழுத்தல்.

Øதீ மிதித்தல்.

Øபால் கொழுக்கட்டை செய்தல்.

Øமஞ்ச நீருடன் வத்தல் கலந்து பயன் படுத்துதல்

Øகொட்டு மேளம் அடித்தல்.

Øவெடி வெடித்தல்.

Øமுச்சந்தியில் தேர்கள் நேருக்கு நேர் சந்தித்தல்;

Øபொது அமைதிக்கு வேட்டு வைக்கும் ஆடல், பாடல்.

 

இதுதான் இஸ்லாமா? புனித முஹர்ரம் மாதத்தின் முதல் 10நாட்களில் குழாய் ஒலி பெருக்கிகளை  ஊர் முழுவதும் அமைத்து ஒலி எழுப்புவதால், எத்தனை மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்கிறது? இரவு நேரங்களில் நீங்கள் செய்யும் இஸ்லாமிற்கும், இறைவனுக்கும் முரணான ஆடல், பாடல், செண்டா சத்தத்தினால் எத்தனை குழந்தைகள் மற்றும் நோயாளிகளின் மன அமைதி கெடுகிறது.

இதை நீங்கள் என்றாவது யோசித்தீர்களா? எத்தனை குடும்பங்கள் மனதிற்குள் வேதனைப்பட்டு சபிக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? புனித மாதத்தில் இது போன்ற மனிதநேயமற்ற குழப்பமான செயல்களைச் செய்து அல்லாஹ்வின் சாபத்தை எதிர் நோக்குவது நம்முடைய ஊருக்கு நல்லதா?

நீங்கள் ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள், நீங்கள் மன்றங்களையும் மக்களையும் ஏமாற்றலாம்; காவல் துறை உங்களை பாதுகாத்து சாதனை புரியலாம். ஆனால் யாரும் படைத்த இறைவனை ஏமாற்ற முடியாது.

இறைவனின் கோபமும், வேதனையும் இறங்கினால் யாரால் தாங்க முடியும்? எத்தனையோ அரசாங்கங்கள் அல்லாஹ்வின் கோபப்பார்வையால் தவிடு பொடியாகி தடம் தெரியாமல் போய்விட்டன என்பதை நாம் உணர்ந்தும் குற்றங்களைப் புரிந்து கொண்டே இருக்கின்றோம்.

அக்கிரமம் இழைத்தவர்களின் ஆஸ்திகள் அழிந்து போயிருக்கின்றன. அவர்களின் ஆணவம் மண்ணோடு மண்ணாகியுள்ளது.

அநியாயங்களுக்கு துணை நின்றவர்களும், நமக்கு ஏன் வம்பு என அநியாயத்தை கண்டுகொள்ளாமல் ஒதுங்கி நின்றவர்களும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்கள்.

இஸ்லாமிய மார்க்கம் உங்களின் செயல்பாடுகளால் களங்கப்படுத்தப் படுகிறது என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டியது எங்கள் கடமை. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். இன்ஷாஅல்லாஹ் எங்களுக்கு உயிர் உள்ளவரை இஸ்லாமிற்காகவே வாழ்வோம்; அனாச்சாரங்களை ஒழிப்பதற்கும், மனித நேயம் மேலோங்குவதற்கும் பாடுபடுவோம்.

இறுதியாக ஒன்றை நினைவு படுத்துகிறோம் திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:

يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّـهَ وَأَطَعْنَا الرَّسُولَا ﴿٦٦﴾ وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا ﴿٦٧﴾ رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا ﴿٦٨

நெருப்பில் அவர்களின் முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! இறைத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!எனக் கூறுவர். எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் எங்களின் தலைவர் களுக்கும், எங்களின் பெரியவர்களுக்கும் வழிப் பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டார்கள்என்றும் அவர்கள் கூறுவார்கள். எங்கள் இரட்சகனே! அவர்களுக்கு இருமடங்கு தண்டனையைத் தருவாயாக! அவர்களைப் பெரும் சாபத்தாலும் சபிப்பாயாக” (என்றும் கூறுவர்).                      (திருக்குர்ஆன் 33:66-68).

அன்புச் சகோதர, சகோதரிகளே!

நீங்கள் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை விளங்காமல் முஹர்ரம் விழா என்ற பெயரில் படுகளம் நடத்தி இஸ்லாமை இழிவுபடுத்தி வருகிறீர்கள். இன்னொரு பக்கம் முஹர்ரம் விழா நடத்துகிறோம் என்ற பெயரில் கட்டாய வசூல் நடத்திவரும் உங்களின் தொல்லைகளுக்கு ஆளாகும் குடும்பங்களும் உள்ளன.

அவர்கள் உங்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆ செய்துவருகிறார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து அதைத் தூய்மையாக பின்பற்றும் மக்களும் மனவேதனை அடைந்து  உங்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆ செய்துவருகிறார்கள்.

இதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? இது மட்டுமல்லாமல் இவ்வுலகில் உங்களோடு இருந்தவர்கள் மறுமையில் பெரும் சாபத்தை உங்களுக்கு எதிராக அல்லாஹ் விடம் கேட்பார்கள் இவற்றை எல்லாம் அறியாமல்தான் நீங்கள் செயல்பட்டு வருகின்றீர்களா?

அல்லாஹ் கூறுவதை கவனமாகக் கேளுங்கள்.

وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ ﴿7:182﴾

நம் வசனங்களைப் பொய்ப்பிப்போரை அவர்கள் அறியாத நிலையில் படிப்படியாகப் பிடிப்போம்.

(திருக்குர்ஆன் 7:182).

 وَأُمْلِي لَهُمْ ۚإِنَّ كَيْدِي مَتِينٌ ﴿7:183﴾

அவர்களுக்கு (இவ்வுலகில்) அவகாசம் அளிக்கிறேன்; என் சூழ்ச்சி மிகவும் உறுதியானது.

(திருக்குர்ஆன் 7:183).

وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ  ﴿7:181

நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கிறார்கள். அவர்கள் சத்தியத்தைக் கொண்டு நேர்வழியைக் காட்டுகின்றனர். அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள்.

(திருக்குர்ஆன் 7:181).

அன்புச் சகோதர சகோதரிகளே!

உங்களை எங்கள் உடன்பிறப்புகளாகவே நாங்கள் கருதுகிறோம். நீங்கள் இஸ்லாமை சரியாக அறியாமல்தான் இவ்வாறு செய்கிறீர்கள் என்பதும் எங்களுக்குப் புரிகின்றது.

எனவே, நாளை மறுமையில் நீங்கள் நரகத்திற்குச் சென்றுவிடக்கூடாது என்ற தூய எண்ணத்தில்தான் அல்லாஹ்வுக்காக மேற்கண்ட காரியங்களை விட்டும் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என மனித நேயத்தோடு கூறிவருகின்றோம்.

இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு அல்லாஹ்வின் கருணை வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்.

இது போன்ற காரியங்களை விட்டும் உங்களைத் தடுப்பதால் எங்களுக்கு வேறு என்ன இலாபம் கிடைக்கும் என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் உண்மை உங்களுக்கே புரியும். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நடத்துவனாக!

ஏர்வாடி முஸ்லிம் ஜமாத்

97-A. வடக்கு மெயின் ரோடு, ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.