Submit to FacebookSubmit to Google PlusSubmit to TwitterSubmit to LinkedIn

பெருநாள் தொழுகையும் பெண்களும்

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:36).

அன்பு சகோதரச் சகோதரிகளே!

நம்முடைய வாழ்க்கையின் அனைத்து அமல்களுக்கும் ஒரு தெளிவான வழிகாட்டுதலை உலகத்தின் அருட் கொடை நம் ஊயிரினும் மேலான நபி ஸல் அவர்கள் தனது 23வருட வாழ்க்கையில் தனது சொல் செயல் அங்கீகாரம் மூலம் வாழ்ந்து காட்டி தந்து விட்டார்கள்.

அந்த அடிப்படையில் அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகையையும் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இளம் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைமறைவில் உள்ள பெண்களையும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய (இரு) பெருநாட்களிலும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஆயினும், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையிலிருந்து ஒதுங்கியிருப்பார்கள்;, நல்ல உரைகளிலும் முஸ்லிம்களின் பிரார்த்தனையிலும் பங்கெடுக்க வேண்டும் (என்றும் கட்டளையிட்டார்கள்). அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருத்தியிடம் துப்பட்டா இல்லாவிட்டால் (என்ன செய்வது)?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளுடைய சகோதரி தமது துப்பட்டாவில் ஒன்றை அவளுக்கு இரவலாக அணிவிக்கட்டும்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:உம்மு  அத்திய்யா (ரலி), நூல்:முஸ்லிம் (1615).

ஆண்களுக்கு என்று பெண்களுக்கு என்று நபி ஸல் அவர்கள் தனித்தனியாக தொழுகை நடத்தவில்லை. அந்த சந்தோசமான நாட்களில் பொதுவான தொழுகை திடலுக்கு ஆண்களையும் பெண்களையும் தொழ வரச் சொல்கிறார்கள் மாதவிடாய் பெண்கள் மட்டும் தொழுகையில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்குமாறு கூறினார்கள்.

இரு பெருநாட்கள் தொழுகைளிலும் அதிகமான தக்பீர்களுடன் தொழுது முடித்த பிறகு குத்பா உரை நிகழ்த்துகிறார்கள் இதுதான் நபி ஸல் அவர்களின் நடைமுறை. ஆனால் இன்றோ மார்கத்தை வழிகாட்ட வந்தவர்களே நபி ஸல் அவர்களின் வழிமுறைக்கு மாற்றமாக தங்களுடைய மணோ இச்சையின் பிரகாரம் செயல் பட்டு தாங்களும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுக்கிறார்கள். நபி ஸல் அவர்கள் சொல்லாத செயலை நன்மை என்று நாமாக ஒன்று செய்தால் என்ன கிடைக்கும் என்பதை பின் வரும் ஹதீஸ் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.

யாரை அல்லாஹ் நேர்வழி காட்டுகின்றானோ அவனை வழிகெடுக்க யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிகெடுக்கின்றானோ அவனை நேர்வழிகாட்ட யாருமில்லை. வேதங்களில் உண்மையானது இறைவேதம். வழிகாட்டல்களில் சிறந்தது நபி அவர்களின் வழிகாட்டல்கள். விடயங்களில் தீயது புதிதாக உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்டது அனைத்தும் பித்அத் ஆகும். பித்அத் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடு அனைத்தும் நரகைசென்றடையும்.

அறிவிப்பாளர்: ஜாபிர் (ரழி). நூல்கள்: இப்னு ஹுஸைமா:1784, நஸாஈ:1579, அஹ்மத்:14689.


ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத்,

97-A, வடக்கு மெயின்ரோடு, ஏர்வாடி - 627103